இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை சேர்ந்தவர் மன்சூர் அகமது. பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர்.

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் லெஜண்ட் என பெயரெடுத்தவர். இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர்களான தன்ராஜ்பிள்ளை உள்ளிட்டோருக்கு எதிராக அவர் விளையாடியுள்ளார்.

தற்போது மன்சூர் அகமதுவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. மிகவும் அபாய கட்டத்தில் உள்ள அவரை இதய மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனவே அவருக்கு இதயம் தேவைப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் சிகிச்சை பெற அவர் முடிவு செய்துள்ளார்.



இதற்காக இந்திய விசாவும் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே மருத்துவ விசா வழங்கும்படி இந்திய அரசிடமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் அவர் முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து மன்சூர் அகமது வெளியிட்ட வீடியோவில், “இந்தியாவுக்கு எதிராக பல போட்டிகளை வென்றுள்ளேன். இதன்மூலம் பல இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியுள்ளேன்.

ஆனால் இன்று எனக்கு இதயம் தேவைப்படுகிறது. இதற்காக இந்திய அரசின் உதவி எனக்கு தேவை.



குறிப்பாக சுஷ்மா சுவராஜ் எனக்கு உதவி செய்ய வேண்டும். எனது விசா விண்ணப்பத்தை கூடுமான வரை விரைவாக பரிசீலிக்கும்படி அவரிடம் கேட்டு கொள்கிறேன்’’ என உருக்கமாக கூறியுள்ளார்.


.

மூலக்கதை