அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது : பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்

போபால் : மகாத்மா காந்தி எப்போதும் கிராமங்களுக்கும் கிராம சுயராஜ்யத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் மந்த்லாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தேச பிதா மகாத்மா காந்தி எப்போதுமே கிராம்ங்களை பற்றியும்  கிராம சுயராஜ்ஜியம் பற்றியும் அதிகம் பேசி வந்ததை பிரதமர் மோடி தமது பேச்சில் சுட்டி காட்டினார். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுவது மற்றும் அந்த நடைமுறையில் வெளிப்படைத்தனமை வேண்டும் என்றும் மோடி கூறினார். கிராமங்களில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி  மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கிராமங்களை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய மோடி, கிராமப்புறங்களில் சிறுவர்களின் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்பட தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பெருமை படத் தெரிவித்தார். இதனிடையே ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்; கிராமங்களில் நீரை சேமிக்க என்ன செய்தோம் என அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

மூலக்கதை