தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்

சிட்னி : தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில்  வாழும் தமிழர்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்திய அரசை கண்டித்து ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி, அடிலெய்டு, பிரிஸ்பேன், பெர்த் உள்ளிட்ட 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேற்கு ஆஸ்திரேலியா தலைநகர் பெர்த்தில் கூடிய 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்த போதும் கூட அதனை பொருட்படுத்தாமல் தங்களது குழந்தைகளோடு குடைபிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் அலையை மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை நீக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பதாகைகள் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர். இதைப்போல அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனிலும், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தமிழர்கள் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை