164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தினகரன்  தினகரன்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் என சுமார் 40,000 பேர் பங்கேற்றனர். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அந்நாட்டில் வாழும் இந்துக்களின் மிக முக்கிய கோயிலாக கருதப்படும் இக்கோயில் 164 ஆண்டுகள் பழமையானது. 1854ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில், 1978ம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களை போல இங்கும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 1979, 1992, 2005ம் ஆண்டுகளில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. கோயிலின் பழமை மாறாமல் வண்ணம் தீட்டுதல், சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இந்தியாவில் இருந்து 20 ஸ்தபதிகள் கொண்ட குழு சிங்கப்பூர் சென்று பணிகள் மேற்கொண்டது. சுமார் 22 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்றார். 2004ல் பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு, இந்து கோயில் விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அவருடன் வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஈஸ்வரன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் பங்கேற்றனர். சுமார் 40,000 பக்தர்கள் திரளாக பங்கேற்று, கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளை வழிபட்டனர்.அமைச்சர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், ‘‘லண்டனில் காமன்வெல்த் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் லீ, நேராக கோயில் விழாவில் பங்கேற்றுள்ளார். இவ்விழா சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது’’ என்றார். பிரதமர் லீ கூறுகையில், ‘‘நம் மூதாததையர்கள் விட்டுச் சென்றதை ஒவ்வொரு தலைமுறையினரும் பராமரித்து மேம்படுத்த வேண்டும்’’ என்றார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடக்கிறது.

மூலக்கதை