தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் மு.க.ஸ்டாலின்

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், அப்போது 90 சதவீத அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் என்றும் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை பெரம்பூரில் நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவில், அவர் பேசியதாவது:-

6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபோது, அதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. இதில் இருந்து, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழக மக்களை, விவசாயிகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆட்சி மத்தியில் நடக்கிறது. அதற்கு துதிபாடும் அடிமைத்தனமான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்தநிலை மாற வேண்டும் என்ற முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டிருக்கிறோம்.

காவிரி நீராதாரம் தஞ்சை, திருச்சி, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் பயன்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடி மதிப்பில் தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக, அந்த மாவட்ட மக்களுக்கும் காவிரிநீர் பயன்படுகிறது.

ராமநாதபுரத்தை வறட்சியான மாவட்டம் என்று சொல்வார்கள். முன்பெல்லாம், தவறு செய்யும் அரசு ஊழியர்களை தண்டிக்க தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திவிடுவேன் என்று சொல்வார்கள், அவர்களை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில், கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றி ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்த்தது தி.மு.க. ஆட்சி.

அதுமட்டுமல்ல, கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் பற்கள் கருப்பாக மாறியிருக்கும். காரணம், குடிக்கும் தண்ணீரில் புளோரின் கலந்து நிலத்தடி நீர் அசுத்தமாகியது. மேலும் பல நோய்கள் பரவியது. பலர் இறந்தனர். இதையெல்லாம் சரி செய்ய, ஏறக்குறைய ரூ.1,900 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தி.மு.க. ஆட்சி கொண்டுவந்தது. அதற்காக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் ஜப்பான் நாட்டுக்குச் சென்று, நிதியுதவி பெற்று, துணை முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திட்டத்துக்கும் காவிரியில் இருந்துதான் தண்ணீர் பெறப்படுகிறது. அதேபோல, வேலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.1,800 கோடி மதிப்பில் காவிரியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

எனவே, டெல்டா பகுதி விவசாயத்துக்கு மட்டுமல்ல, பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் பயன்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட காவிரி உரிமையில் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தால், காவிரி உரிமையை மீட்க வேண்டும் என்பதற்காக நாம் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல், ரெயில் மறியல், முழு அடைப்புப் போராட்டம் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, டெல்டா பகுதியில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நாம் நடத்தினோம். நாளை (இன்று) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். ஆனால், மத்திய அரசு இதுபற்றி கவலைப்படவில்லை.

மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை தெரிந்துகொண்ட காரணத்தால், இதுவரை அடித்த கொள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளவும், இன்னும் அதிகமான கொள்ளைகளை அடிக்கவும், செயல்படுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு இரு தினங்களுக்கு முன் மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. நாம் சட்டமன்றத்தில் பலமுறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை.

விரைவில் தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகும். வந்தவுடன் முதல் வேலையாக லோக் ஆயுக்தா சட்டத்தை நிறை வேற்றுவோம். அதன்பிறகு, இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களை விசாரிப்போம்.

அதன் பிறகு, 100-க்கு 90 சதவீத அமைச்சர்கள் வெளியில் இருக்க மாட்டார்கள். சிறையில் இருப்பார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் மக்களுக்கு பாடுபட்டு பணியாற்றக்கூடிய தி.மு.க. ஆட்சி உருவாக நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை