மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

PARIS TAMIL  PARIS TAMIL
மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் லீவிஸ் விக்கெட்டை எடுத்தார். அடுத்து இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் எதிரணியினர் திணறினர்.
 
மும்பை அணி 130 ரன்கள் எடுத்தபோது இஷான் கிஷான் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சூர்ய குமார் யாதவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
 
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 72, இஷான் கிஷான் 58 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டும், குல்கர்னி 2 விக்கெட்டும் எத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
 
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். திரிபாதி 9 ரன்களிலும், ரகானே 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சஞ்சு சாம்சன் உடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.
 
சாம்சன் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம்சன் அரைசதம் கடந்தார். 17வது ஓவரை வீசிய பும்ரா சாம்சன், பட்லர் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்தார். சாம்சன் 39 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கிளாசன், ஜோப்ரா ஆர்சர் ஆகியோர் களமிறங்கினர். 
 
கிளாசன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் கவுதம் அதிரடியாக விளையாடினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது, கிருஷ்ணப்பா கவுதம் 11 பந்தில் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 
 

மூலக்கதை