22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு

தினமலர்  தினமலர்
22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு

சென்னை இண்டர்நேஷனல் சென்டர் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கமல் நேற்று பேசினார். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகனாக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். நடிகன் அரசியலுக்கு வரலாமா என்று கேட்கிறார்கள். நான் அவர்களை கேட்கிறேன் அரசியல்வாதியாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதுவரை எனது சொந்த பணத்திலிருந்து கட்சி நடத்தி வருகிறேன். தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்த பிறகு மக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்.

அவர்கள் நான் சரியாக கணக்கு வைத்திருக்கிறேனா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

தேர்தல்களில் நான் வெற்றி பெறுவதைவிட போட்டியிடவும், தோல்வி அடையவும் தயாராக இருக்கிறேன். எதர்கட்சி வரிசையில் உட்கார எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் தேர்தலில் வாக்களிக்க ஒரு போதும் பணம் கொடுக்க மாட்டேன். இதை எனது கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறேன். ஏழறை கோடி தமிழர்களுக்கும் தலா 45 ஆயிரம் கடன் இருக்கிறது. இந்த கடனை அடைக்க வேண்டும்.

எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான். அதை ஒரு சிலர் செய்வதுதான் தவறு. அரசுக்கு மதுவிற்பனை முக்கிய வருமானம்தான். அரசை நடத்துவதற்கு அதுவே முதலான வருமானம் இல்லை. அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து திருடுவதை நிறுத்தி விட்டால் அதுவே பெரிய வருமானம்தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்த வேண்டும்தான். அதற்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்தியது சரியானதல்ல. எனக்கு கிரிக்கெட் தெரியாது, பிடிக்காது, சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் நடந்தபோதுகூட சென்னையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது. 22 வீரர்கள் விளையாடும் இடத்தில் போராட்டம் நடத்தாமல் மக்கள் வாழ்க்கையோடு விளையாடும் 234 எம்.எல்.ஏக்கள் இருக்கிற கோட்டை முன் நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாக சென்றிருப்பேன். இவ்வாறு கமல் பேசினார்.

மூலக்கதை