'பிளாஸ்டிக்' இல்லா பூமி வேண்டும்!இன்று உலக பூமி தினம்

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் இல்லா பூமி வேண்டும்!இன்று உலக பூமி தினம்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத்தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.

பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு முற்றுப்புள்ளி' என்பதே இந்தாண்டின் மையக்கருத்து.
கடந்த 1970, ஏப்., 22ம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட
பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி, லட்சக்கணக்கான மக்கள், அமெரிக்கா உள்ளிட்ட
சில நாடுகளில் போராட்டம் நடத்தினர். பின் இத்தினமே, உலக பூமி தினமாக உருவெடுத்தது.

பிளாஸ்டிக் எமன்:



இன்றைய சூழ்நிலையில் நீரும், காற்றும் சுத்தமாக இல்லை. கிராமத்து தெருக்களும் சிமென்ட் ரோடாகி விட்டதால், பெய்யும் மழைநீர் பூமிக்குள் செல்ல வழியில்லை. அதிகரிக்கும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பூமிக்குள் நிலத்தடி நீர் ஊடுருவிச் செல்லாமல் மேற்பரப்பில் தங்கி ஆவியாகிறது. பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமெனில் தனிமனிதர், அரசு, அமைப்பு என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். 'தவிர்ப்பது, குறைப்பது, மீண்டும் பயன்படுத்துவது, மறுசுழற்சி செய்வது' என்ற முறையில் செயல்பட்டால், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம். பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொது இடங்களில் இதற்கான விழிப்புணர்வை அதிகப்படுத்துவோம்.

900



உலகில் 1950ல் இருந்து, 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.

மரம் நடுவோம்



பருவமழை பொய்த்ததற்கு காரணம் பருவநிலை மாற்றம். இதனால் ஆண்டின் பெரும்பாலான பகுதி, வெப்பகாலமாக உள்ளது. தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் கார்பன் அளவு, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை குறைக்க வேண்டுமெனில், மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இதனால் வளிமண்டலத்துக்கு செல்லும் கார்பனை, மீண்டும் மரங்களே எடுத்துக் கொள்ள முடியும்.

மூலக்கதை