சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க அவசர சட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க அவசர சட்டம்

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் அண்மையில் 8 வயது சிறுமி ஒருவரை பலர் கடத்திச்சென்று கூட்டாக கற்பழித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுபோல் சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தின.

மேலும் தற்போது நடை முறையில் உள்ள பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் (2012) திருத்தங்கள் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய மந்திரி மேனகா காந்தியும் சிறுமிகளை கற்பழிப்போருக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இது தொடர்பான ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்ஹா, மத்திய அரசு போக்சோ சட்டத்தில் இது தொடர்பாக தேவைப்படும் திருத்தங்களை செய்ய பரிந்துரைத்துள்ளது என்று கூறி அது தொடர்பாக உறுதிமொழி கடிதத்தையும் கோர்ட்டில் அளித்தார்.

இந்த நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. தனது 6 நாள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பிய உடனேயே மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக டெல்லி திரும்பிய அவரை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசர சட்டமாக பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக் காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை.

* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வாழ்நாள் சிறை தண்டனை அல்லது தூக்கு தண்டனை.

(தற்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.)

* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை.

* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் அதற்கு தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனை 20 ஆண்டுகளாக, இரட்டிப்பாக்கப்படுகிறது. இதை வாழ்நாள் சிறை தண்டனையாகவும் நீட்டிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது.

* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்கச் செய்யும் வகையில், அவை தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கவேண்டும்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் மேல்முறையீடு மனுக்கள் 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கிடையாது. இதில் ஜாமீன் மனு மீது முடிவு எடுப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அரசு தரப்பு வக்கீலுக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவேண்டும்.

மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள இந்த அவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஐகோர்ட்டுகளில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இந்த வழக்குகளை கையாள அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்படும். இந்த குழுவில் விசாரணைக்கு தேவைப்படும் அளவிற்கு ஏற்ப மனித சக்தி பயன்படுத்தப் படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வழக்குகளின் விசாரணைக் காக சிறப்பு தடயவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் பாலியல் வன்முறை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்து வைக்கும். இது தொடர்பான தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவைப்படும்போது பகிர்ந்து கொள்ளப் படும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும்.

மூலக்கதை