ஓடுபாதையிலிருந்து விலகி புல்லில் சிக்கிய விமானம் : 139 பேர் உயிர் தப்பினர்

தினமலர்  தினமலர்
ஓடுபாதையிலிருந்து விலகி புல்லில் சிக்கிய விமானம் : 139 பேர் உயிர் தப்பினர்

காத்மண்டு: நேபாளத்தில் 139 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் மோதி நின்றது.நேபாளத் தலைநகர் காத்மண்டு திரிபுவன் விமான நிலையத்திலிருந்து மலிந்தோ ஏர் ஜெட் விமானம் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 4 பணியாளர்களும், 135 பயணிகளும் இருந்தனர்.விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதில் பழுது இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமானத்தை நிறுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் விமானம் வேகமெடுத்துவிட்டதால் நிறுத்த முடியவில்லை. வானில் பறக்கத்துவங்கிவிட்டால் பயணிகளை காப்பாற்றுவது கடினம் என உணர்ந்த விமானி, ஓடுபாதையை கடந்தும் விமானத்தை ஓடச் செய்தார். ஓடுதளத்தை கடந்து 50 மீட்டர் சறுக்கிச் சென்று விமானம் நின்றதாக திரிபுவன் விமான நிலைய பொது மேலாளர் ராஜ் குமார் சேத்ரி தெரிவித்தார்.விபத்தில் யாரும் காயமடையவில்லை. விமானமும் சேதமடையவில்லை. விமானத்தின் முன் சக்கரங்கள் மட்டும் சேதமடைந்தன.இந்த விபத்தைத் தொடர்ந்து, ஓடுபாதை மூடப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, விமானத்தை மீட்டு விமான நிறுத்துமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. திரிபுவன் விமான நிலையமும் விபத்துகளும் பிரிக்க முடியாததாகி வருகின்றன.வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து திரிபுவனில் வந்திறங்கிய -வங்க ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மீட்கப்பட்டனர். 2015ல் துருக்கி விமானம் தரையிறங்கிய

போது ஏற்பட்ட விபத்தில், விமான நிலையம் 4 நாள்களுக்கு மூடப்பட்டது.

மூலக்கதை