காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் உலக வரைபடத்தில் வேலூரை தேட வைத்து பெருமை சேர்த்துள்ளார் : அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டு

தினகரன்  தினகரன்

வேலூர்: ‘காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார் , உலக வரைபடத்தில் வேலூரை தேடவைத்து பெருமை சேர்த்துள்ளார்’ என்று அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டினார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த 21வது காமன்வெல்த் போட்டியில், வேலூர் வீரர் சதீஷ்குமார் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டனர்.சதீஷ்குமாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். உலக வரைபடத்தில் வேலூரை தேடவைத்து பெருமை சேர்த்துள்ளார். அவரை மாவட்டம் சார்பில் பாராட்டவேண்டியது நமது கடமை. உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும்’ என்று வாழ்த்தினார். தொடர்ந்து அமைச்சர் நீலோபர் கபில், கலெக்டர் ராமன் ஆகியோர் பாராட்டி பேசினர். முன்னதாக, வேலூர் கோட்டையில் இருந்து வடக்கு காவல் நிலையம் வழியாக நேதாஜி ஸ்டேடியம் வரையில் திறந்த வாகனத்தில் போலீசாரின் பேண்டு வாத்தியம் முழங்க சதீஷ்குமாரையும், அவரது தாய் தெய்வானை, தந்தை சிவலிங்கம் ஆகியோரையும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, நிருபர்களிடம் சதீஷ்குமார் கூறுகையில், ‘பல்வேறு தடைகளை தாண்டி தங்கம் வென்றது பெருமையாக உள்ளது. விளையாட்டில் இங்கிலாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வீரர்களை எதிர்கொள்ளும் வகையில் என்னை தயார்படுத்தி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது இலக்கு’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை