மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டம்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்கள் நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முத்திரை தாள் வடிவில் செலுத்திவருகின்றனர். இதனால் வழக்கு ஆவணங்களைவிட முத்திரை தாள்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை எளிதாக்க சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிமன்ற கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த புதிய திட்டத்தை தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-

இனி வழக்கு தொடர்பவர்கள், வக்கீல்கள் ஆகியோர் தங்களது வீட்டில் இருந்தபடியே எந்நேரமும் இணையதளம் மூலம் கோர்ட்டு கட்டணத்தை செலுத்தலாம். இதற்கு முன்பு கோர்ட்டு கட்டணத்தை முத்திரைத்தாள் வடிவில் செலுத்தும்போது அதற்கு ஒப்புதல் கையெழுத்து வாங்கவேண்டியது வரும்.

ஆனால், இந்த புதிய முறையில் அவை இல்லை. இதில் நம்பகத்தன்மை உள்ளது, போலிகள் தடுக்கப்படுகின்றன. தென்மாநிலங்களில் மின்னணு முறையை அமல்படுத்தும் முதல் ஐகோர்ட்டு என்ற பெயரை சென்னை ஐகோர்ட்டு பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இத்திட்டத்தை செயல்படுத்த ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிலும், டெல்லி உள்ளிட்ட 7 மாநில ஐகோர்ட்டுகளிலும் இம்முறையை செயல்படுத்திவருகிறது.

நீதிசார்ந்த மின்னணு முத்திரையை பொதுமக்கள் தாங்களாகவே இணையம் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம். கணினி இல்லாதவர்கள் மேற்கண்ட நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மையங்கள், நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உரிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்து தொகையினை செலுத்தி, நீதிசார்ந்த மின்னணு முத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறை முதற்கட்டமாக சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையிலும், அடுத்தகட்டமாக அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அரசின் இசேவை மையங்கள் மூலமாகவும் இம்முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் இந்த முத்திரைத்தாளை ஒப்படைத்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, அதனை மீளவும் தவறான முறையில் பயன்படுத்தாவண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மட்டுமல்ல, எண்ணில்லா நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நீதித்துறைக்கு தமிழக அரசு செய்துகொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் நீதித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் 149 புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவுவதற்கு ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை ‘ஸ்கேனிங்’ செய்து கணினிமயமாக்குவதற்காக ரூ.37 கோடி நிர்வாக ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐகோர்ட்டு கணினி திட்டக்கமிட்டியின் தலைவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பேசும்போது, “இந்த திட்டத்தில் இணையதளம் வழியாக உங்கள் வங்கிக்கணக்கில் இருந்தும், ‘கிரெடிட்’, ‘டெபிட்’ கார்ட்டுகள் மூலமும் கோர்ட்டு கட்டணத்தை செலுத்த முடியும். வக்கீல்களுக்கு தனி கணக்கு தொடங்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஐகோர்ட்டு நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரவிந்த்பாண்டியன், நர்மதா சம்பத், ராஜகோபால், அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாஸ், அரசு பிளடர் ராஜகோபாலன், சிறப்பு அரசு பிளடர் டி.சி.கோபாலகிருஷ்ணன், அரசு வக்கீல் டி.ராஜா, வக்கீல் இரா.சிவசங்கர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நன்றி கூறினார்.

மூலக்கதை