ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வாட்சன் அதிரடி சதத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். போட்டியின் முதல் பந்தை நோ-பாலாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் அந்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகள் விரட்டினர். 5-வது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை திரிபாதி ஸ்லிப் திசையில் பிடிக்க தவறினார்.
 
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் களமிறங்கிய தோனி 5, பில்லிங்ஸ் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 
106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக விளையாட சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ஹெயின்ரிச் கிளாசென் ஆகியோர் களமிறங்கினர். கிளாசன் 7 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரகானே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
 
அதன்பின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பட்லர் 22 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த ஸ்டோக்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 
 
இறுதியில் ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி பந்துவீச்சில் தீபக் சஹார், ஷர்துல் தாகுர், வெய்ன் பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
சென்னை அணியின் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

மூலக்கதை