'தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் அல்ல'

தினமலர்  தினமலர்
தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் அல்ல

புதுடில்லி: 'சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைப்பதை கட்டாயம் ஆக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைக்க உள்ளது.

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்தாண்டு, அக்டோபரில், இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.ம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு, 'தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்வோரை, தேசப்பற்றை தோளில் சுமந்து செல்லும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது.

'தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதவர், குறைந்தளவு தேசப்பற்று உடையவர் எனக் கருத கூடாது' என, தெரிவித்தது. இதையடுத்து, இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, 12 பேர் அடங்கிய, அமைச்சரவை இடையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு, ஆறு மாத அவகாசம் தரப்பட்டது. இந்த குழு, சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த குழு அளிக்க உள்ள பரிந்துரைகள் குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு, ரேடியோவில், ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது; மாநில அரசு விழாவில் பங்கேற்க, கவர்னர் வரும்போது; பள்ளிகளில், காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தின்போது, தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும். தேசிய கொடி ஏற்றப்படும்போது, தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டுமா என்பதை, மக்களின் யோசனைக்கு விடலாம். தேசிய கீதத்தின் சுருக்கத்தை இசைக்க செய்யலாம்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.

இந்த நிபுணர் குழுவுக்கு, மத்திய உள் விவகாரத்துறை சிறப்பு செயலர், பிரிஜ் ராஜ் சர்மா தலைமை வகித்தார். இந்த குழு, இதுவரை மூன்று முறை கூடி விவாதித்துள்ளது.

தன் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு முன், அடுத்த வாரம், இக்குழு மீண்டும் கூடி விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை