5.32 கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு சங்க மேலாளர் கைது: இலவச வேட்டி, சேலை விற்று

தமிழ் முரசு  தமிழ் முரசு
5.32 கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு சங்க மேலாளர் கைது: இலவச வேட்டி, சேலை விற்று

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சென்னிமலை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மேலாளராக சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரை சேர்ந்த செந்தில்குமார் (53) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள நெசவாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை நெசவு செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை சங்கத்தின் மூலமாக கொள்முதல் செய்த செந்தில்குமார் அந்த இலவச வேட்டி, சேலைகளை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளார்.

கூட்டுறவு சங்கம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட தொகையை சங்கத்தின் கணக்கில் செலுத்தவில்லை.

இது தொடர்பாக ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் பிச்சைமுத்துவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கடந்த 2017ம்ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் விற்பனை செய்யப்பட்டதும், இதற்கான தொகை 5 கோடியே 32 லட்சத்து 19 ஆயிரத்து 693 ரூபாயை சங்க கணக்கில் செலுத்தாமல் செந்தில்குமார் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் பிச்சைமுத்து ஈரோடு வணிக குற்றபுலனாய்வு பிரிவில் புகார் அளித்தார்.

வணிக குற்றப்புலனாய்வு பிரிவு டி. எஸ். பி, கனகேஸ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, எஸ். ஐ. க்கள் வேலுமணி, சக்திவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.   இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தில் உள்ள இலவச வேட்டி, சேலையை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நேற்று சங்கத்தின் மேலாளர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

.

மூலக்கதை