லோயா விவகாரத்தில் ராகுலின் பொய்கள்: யோகி ஆதித்யநாத் தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
லோயா விவகாரத்தில் ராகுலின் பொய்கள்: யோகி ஆதித்யநாத் தாக்கு

லக்னோ: நீதிபதி லோயா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பொய்கள் வெட்டவெளிச்சமாகிவிட்டது என உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ கோர்ட் நீதிபதி லோயா மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரித்து, சொராபுதீன் வழக்கிலிருந்து பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை விடுதலை செய்தார்.

லோயா திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர். இதை தொடர்ந்து மும்பையை சேர்ந்த அமைப்புகள் லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.



இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. லோயா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை.

இதனால் அவரது மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டது. இது தொடர்பான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் லோயா மரணத்தை சந்தேகித்து சிறப்பு விசாரணை கோரும் மனுக்கள் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவு என்றும் உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறுகையில், நீதிபதி லோயா விவாதம் முடிந்து விட்டது. காங்கிரஸாரின் வெறுப்பு கக்கும் முகம் அம்பலமாகிவிட்டது.



ராகுல் காந்தி 150 நபர்களுடன் சேர்ந்து புகார் எழுப்பினார். ஆனால் பொய்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ராகுல் காந்தி தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இந்தியாவை ஆண்டுவிடக்கூடாது என்று விரும்புகிறார் என தெரிவித்துள்ளார். லோயா மரணம் குறித்த சிறப்பு விசாரணைக் கோரும் மனுக்களின் பின்னணியில் ‘புலப்படா கை’ உள்ளது என்று பாஜக சூசகமாக ராகுல் காந்தியை சாடி வருகிறது.

மேலும் அமித் ஷாவுக்கு எதிராக சதி செய்ததற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டதையடுத்து ‘இந்து தீவிரவாதம்’ காவிபயங்கரவாதம் என்ற வார்த்தைகளை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தது.

லோயா தீர்ப்புக்குப் பிறகு தங்கள் கை கறைபடியாத கை என்று பாஜவினர் கொக்கரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை