மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி 24,000 அரசு ஊழியர்கள் விண்ணப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி 24,000 அரசு ஊழியர்கள் விண்ணப்பம்

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி, சுமார் 24 ஆயிரம் அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடும் வறட்சி, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவற்றால் நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

விவசாயிகள் தற்கொலை இங்குதான் அதிகமாக நடக்கிறது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ரூ. 34 ஆயிரம் கோடி மதிப்புள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிரா அரசு கடந்தாண்டு அறிவித்தது.

கடன் தள்ளுபடி விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

லட்சக்கணக்கான விவசாயிகள் மனு செய்துள்ள நிலையில், அதில் சுமார் 24 ஆயிரம் அரசு ஊழியர்கள் கடன் தள்ளுபடி கேட்டு விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற குளறுபடிகளால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பட்டில் கூறுகையில், ‘‘விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடுகள் களையப்பட்டு வருகின்றன.

இதுவரை 1. 30 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், தொழில் செய்வோர், கூட்டுறவு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


.

மூலக்கதை