ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துகோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்: அமைச்சர்களும் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துகோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்: அமைச்சர்களும் போராட்டம்

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். பிறந்தநாளான இன்று அவர் உண்ணாவிரதம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பாஜ வாக்குறுதி அளித்திருந்தது. இதை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாததால் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார்.

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை.    இதனால் அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஆந்திராவை சேர்ந்த எம்பிக்கள் இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் முடங்கின. எம்பிக்கள் பல்வேறு நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் பலனில்லை.



இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இறங்கினர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மத்திய அரசு கொண்டுவரவில்லை.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் ஆந்திராவை சேர்ந்த அனைத்து கட்சிகளும் அதிருப்தி அடைந்தன. இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இன்று மேற்கொண்டுள்ளார்.

விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் காலை 7 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. உண்ணாவிரதம் இருந்துவரும் சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


.

மூலக்கதை