செக்ஸ் விவகாரத்தில் பதவி விலகக்கோரி அடுத்தடுத்து போராட்டம் எதிரொலி: கவர்னர் மாளிகைக்கு 1000 போலீஸ் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
செக்ஸ் விவகாரத்தில் பதவி விலகக்கோரி அடுத்தடுத்து போராட்டம் எதிரொலி: கவர்னர் மாளிகைக்கு 1000 போலீஸ் பாதுகாப்பு

சென்னை: மாணவியை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கவர்னர் பதவி விலகக் கோரி அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருவதால், கவர்னர் மாளிகைக்கு ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கவர்னரின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்தநிலையில், கவர்னர் பதவி விலகக் கோரி திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அவரது மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தால் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையில், தேமுதிக சார்பிலும் இன்று கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. இளைஞர் பெருமன்றத்தின் சார்பிலும் போராட்டம் நடந்தது.

இதனால் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகள், சங்கங்கள், இயக்கங்கள் போராடத் தொடங்கி விட்டன. ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம், அண்ணா சாலை ஸ்தம்பித்த விவகாரம், பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், விமானநிலையம் முற்றுகை, கருப்பு பலூன் பறக்க விடுதல், விமானநிலையத்தில் 80 அடி உயர விளம்பர பலகையில் ஏறி மோடிக்கு கருப்புக் கொடி காட்டுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில், கவர்னர் மாளிகையிலும் முற்றுகைப் போராட்டங்கள் தொடங்கியிருப்பதால், ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 4 துணை கமிஷனர்கள் மற்றும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கவர்னர் மாளிகையின் 2 நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் பொதுமக்கள் மாளிகைக்குள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

போலீசாரின் கடுமையான பாதுகாப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை