பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பு: சசிகலா அறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவு திடீர் சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பு: சசிகலா அறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவு திடீர் சோதனை

சென்னை:  பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் பரப்பன அக்ரஹார மத்திய சிறை உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் சிறை அதிகாரிகளின் துணையோடு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.   கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்படுவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



எனவே பரப்பன அக்ரஹார  சிறையில் திடீர் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறையின் தண்டனை கைதிகள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

திடீரென போலீசார் சோதனைக்கு வருவதை கண்டு அங்கிருந்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறை அதிகாரிகளின் உதவியோடு, கைதிகள் தங்கியுள்ள ஒவ்வொரு அறைகளிலும் தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் ஆணையர் சதீஷ் குமார் தலைமையில், உதவி காவல் ஆணையர்கள் ஜிமேந்திர கணகாரி, போர லிங்கையா ஆகியோர் உள்பட சுமார் 215 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கைதிகள் அறையில் இருந்து 11 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், பென் டிரைவ், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சசிகலா தங்கியுள்ள அறையிலும் நேற்றிரவு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன் சசிகலா தங்கியுள்ள அறையில் சிறப்பு வசதிகள்  செய்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அதேபோல்,  சிறை அதிகாரிகளின் சம்மதத்தோடு சசிகலா வெளியே ஷாப்பிங் சென்று வருவது போன்ற  வீடியோ ஆதாரங்களும் வெளியாகின.

இதைதொடர்ந்து சசிகலா அறையில் அதிரடி சோதனை  நடத்தப்பட்டு சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும் தொடர்ந்து சசிகலாவுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் செய்து கொடுக்கப்படுவதாகவும், அனுமதியில்லாத சில பொருட்களை சசிகலா உபயோகப்படுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று போலீசார் அங்கேயும் சோதனை நடத்தியிருக்கலாம் என்று பரப்பன அக்ரஹார சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதனால் பரப்பன அக்ரஹார சிறை நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து கைதிகளிடமும், சிறை அதிகாரிகளிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

.

மூலக்கதை