ஆதார் அடையாள அட்டை வழக்கு கோர்ட்டில் ஆணையம் புது விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆதார் அடையாள அட்டை வழக்கு கோர்ட்டில் ஆணையம் புது விளக்கம்

புதுடெல்லி: ஆதார் சட்டத்தின் படி தனி நபர்களின் சாதி, மத, இன அடையாளங்கள் ஆதாரில் பதிவு செய்யப்படுவதில்லை, எனவே ஆதாரில் பதிவு செய்துள்ள பயோ மெட்ரிக் விவரங்களை வைத்து மக்களிடையே பாகுபாடு செய்வதற்குப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளோம் என்று ஆதார் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டை தற்போது மத்திய மாநில அரசின் பல்வேறு நல திட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தவிர செல்போன், வங்கி கணக்கு, பான், இன்சூரன்ஸ் என எல்லாவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



இந்த வழக்கை சுப்ரீம்  கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. ஆதார் ஆணையம் சார்பாக அதன் வக்கீல் திவேதி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஆதார் அட்டையில் இனம், மதம், சாதி, உள்ளிட்ட அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

இதைக் கொண்டு பாகுபாடு செய்வதும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. மேலும் இந்தியக் குடிமகனின் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

மேலும் ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் கைவிரல் ரேகை, கண்விழிப்படலம் போன்ற பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் ஆதார் ஆணையம் மற்றவர்களுடன் பகிரவில்லை. இவ்வாறு திவேதி கூறியிருந்தார்.



ஆனால் திவேதியின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ. கே. சிக்ரி, ஆதார் அட்டையில் தனிநபர் குறித்த தகவல்கள் சேர்க்கப்படுவது பற்றி மக்கள் இன்னமும் அச்சப்படுகின்றனர் என்றார். இதற்கு திவேதி, “உண்மையான பயங்கள் குறித்துதான் எங்களுக்குக் கவலை.

தண்ணீரைக் கண்டே பயப்படுபவர்கள் குளத்தில் குதிக்க முடியாது.

நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதிலுரைத்தார்.

.

மூலக்கதை