பாலியல் பலாத்காரம், சமூகத்தின் மீதான தீய செயல் பிரதமர் மோடி வேதனை

PARIS TAMIL  PARIS TAMIL
பாலியல் பலாத்காரம், சமூகத்தின் மீதான தீய செயல் பிரதமர் மோடி வேதனை

பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்று உள்ளார். அங்கு நேற்று முன்தினம் நடந்த ‘பாரத் கி பாத், சாப்கே சாத்’ (எல்லோருக்கும் இந்தியாவின் பேச்சு) கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷி வழி நடத்திய நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 2 மணிநேரம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது வருமாறு:-

மக்கள் ஏதாவது சொல்லும்போது, அதை அரசாங்கம் கேட்கும்; செய்து முடிக்கும் என அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். கூடுதலான மாற்றங்களின் நாட்கள் முடிவுக்கு வந்து விட்டன.

எங்கள் அரசாங்கம் மீது விமர்சனங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இல்லாமல், ஜனநாயகம் வெற்றி பெற்று விட முடியாது.

முன்னர் அரசாங்கம் என்பது ஒரு குடும்பத்தையே (நேரு குடும்பம்) மையமாக கொண்டு சுற்றி சுழன்றது. ஆனால் இப்போது, ஜனநாயகத்தில் டீ விற்ற ஒருவர் கூட தங்களின் பிரதமர் ஆக முடியும்; அரண்மனையில் கை குலுக்க முடியும் என்று மக்கள் காட்டி இருக்கிறார்கள்.

அப்போதைக்கும், இப்போதைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. இப்போது கொள்கை தெளிவாக இருக்கிறது; நோக்கம் தெளிவாக இருக்கிறது; நோக்கங்கள் உன்னதமானவை; எனவே விரும்பிய பலனை அடைய முடிகிறது.

சமாதானத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டு உள்ளோம். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகிறவர்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் புரிந்துகொள்கிற மொழியிலேயே நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்.

மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தின்போது ஒவ்வொருவரிடமும் நீங்கள் என்ன செய்தாலும், அது இந்தியாவின் சுதந்திர போராட்டத்துக்கான பங்களிப்பு ஆக அமையும் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு இந்த தருணம், வளர்ச்சி என்பது மக்கள் இயக்கம் ஆக மாற வேண்டும்.

பாலியல் பலாத்காரம் என்பது தனிநபர் மீது நடத்தப்படுகிற தீய செயலாக நான் பார்க்கவில்லை. இது சமூகத்தின் மீது நடத்தப்படுகிற தீய செயல். இது கவலைக்கு உரியது.

நமது மகள்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் எப்போதும் கேட்கிறோம். அவர்கள் எங்கே போகிறார்கள் என்று கேட்கிறோம். நாம் நமது மகன்களையும் கேட்க வேண்டும். இந்த பாலியல் பலாத்கார குற்றத்தை செய்கிறவரும், யாரோ ஒருவரின் மகன்தான். அவருக்கும் வீட்டில் அம்மா என்று ஒருவர் இருக்கிறார்.

நான் சக இந்தியர்களைப்போன்று ஒரு சாதாரண குடிமகன்தான். லட்சோப லட்சம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான தீர்வுகள் இருக்கின்றன.

நான் தவறுகள் செய்யலாம். ஆனால் எந்த வேலையையும் நான் தீய நோக்கத்துடன் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை