தமிழகத்துக்கான நிதியை குறைக்கக் கூடாது நிதிக்குழு தலைவரிடம் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்துக்கான நிதியை குறைக்கக் கூடாது நிதிக்குழு தலைவரிடம் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறைப் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர் நேற்று காலை 15-வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சில எம்.பி.க்கள் உடன் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நிதி தேவைகள் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் சமர்ப்பித்தார். அந்த மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:-

15-வது நிதிக்குழுவில் தமிழ்நாட்டுக்கான நிதி பரிமாற்றம் தொடர்பாக சில கோரிக்கைகளை நான் முன்வைக்கிறேன். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கும்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கை கருத்தில் கொள்ளக்கூடாது. 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கு அடிப்படையிலேயே நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 1971-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. எனவேதான், 1971-ம் ஆண்டு கணக்கின்படி நிதி ஒதுக்கீடு செய்ய கேட்கிறோம். 2011-ம் ஆண்டு கணக்கின்படி நிதி ஒதுக்கினால் தமிழகத்துக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

அதைப்போல தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அதிகளவில் முதலீடுகளை பெற்றுள்ளது. இதை காரணம் காட்டி தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

மேலும், மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை கணக்கில் கொண்டே மாநில அரசுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏன் என்றால் எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் ஒரே சீராக அமல்படுத்தப்படுவதில்லை. காலகட்டங்கள் மாறுபடுகின்றன. இதை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்கிறோம். அதைப்போல மக்களின் நலனுக்காக மாநில அரசுகள் நிறைவேற்றும் சலுகை திட்டங்களை நிதிக்குழு கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அதைப் பெற்றுக்கொண்ட நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்தின் நிதி தேவையும் தனித்தனியாக மதிப்பிடப்படும். அவற்றின் சிறப்பு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இந்தியாவின் வளமைக்கு பெரிதும் பங்காற்றிய தமிழ்நாடு போன்ற ஒரு முன்னேறிய மாநிலத்தின் கோரிக்கையை நிதிக்குழு கவனமாக பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் மாத இறுதியில் வர நிதிக்குழு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை பொன்.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், ‘எவ்வளவு கவனம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கவனம் கொடுத்து, தமிழகத்துக்கு நம்பிக்கை கிடைக்கும் அளவில் செயல்படுவேன்’ என்றார்.

இதன்பின்னர், நிதி மந்திரி அருண் ஜெட்லி, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சட்ட மந்திரியை சந்தித்தது குறித்து அவர் கூறுகையில், ‘வன்கொடுமை சட்டம் குறித்து தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ததை மந்திரியிடம் சுட்டிக்காட்டி மத்திய அரசும் ஆதரவாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்’ என்றார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாகவும் பேசியதாக தெரிவித்தார்.

மத்திய மந்திரிகளை சந்தித்த பின்னர், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், “எவ்வளவோ போராடியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையே? இதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பதவி விலகுவீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித்தான் தமிழக அரசு சார்பில் உண்ணாவிரதம் இருந்தோம். சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந்தேதிக்கு வழக்கை நீட்டித்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பெற்றுத்தருவதில் ஜெயலலிதா அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக இதை கையில் எடுத்து கபட நாடகம் ஆடுகிறார்கள் என்பதே உண்மை.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை