முதல்வர் பரீக்கர் உடல் நிலை: வதந்தி பரப்பியவர் கைது

தினமலர்  தினமலர்
முதல்வர் பரீக்கர் உடல் நிலை: வதந்தி பரப்பியவர் கைது

பனாஜி,:கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை குறித்து, தவறான தகவல் பரப்பிய நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவாவில், முதல்வர், மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், வயிற்று வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பரீக்கர், உடல்நிலை தேறியதை அடுத்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அடுத்த நாள் சட்டசபைக்கு வந்து, பட்ஜெட் தாக்கல் செய்தார்.மீண்டும், மார்ச் 5ல், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரீக்கர், கணையத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சிகிச்சை பெற, அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், பரீக்கரின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்பிய, கென்னத் சில்வேரா என்பவரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.கடந்த ஆண்டு, பனாஜி சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், பரீக்கருக்கு எதிராக போட்டியிட்ட கென்னத், தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, 'அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரீக்கர், உடல் நலம் தேறி வருகிறார்; அடுத்த மாதம் நாடு திரும்புவார்' என, கோவா மாநில, பா.ஜ., தரப்பில் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மூலக்கதை