2 ஆண்டு தடைக்கு பின் இன்று சிஎஸ்கே - ராயல்ஸ் மோதல்

தினகரன்  தினகரன்

புனே: ஐபிஎல் டி20 தொடரில் 2 ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் முறையாக இன்று மோதுகின்றன. சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்த பின் இவ்விரு அணிகளும் இம்முறை களமிறங்கியுள்ளன. இதில், சிஎஸ்கே தனது முதல் 3 லீக் போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது.  இந்நிலையில், தடைக்குப் பிறகு இவ்விரு அணிகளும் முதல் முறையாக மோதிக் கொள்ளும் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. சிஎஸ்கே அணியை பொறுத்த வரையில், விளையாடிய 3 போட்டியிலும் பிரமாதப்படுத்தி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் பிரவோ விளாச த்ரில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவுக்கு எதிரான 2வது போட்டியில் பில்லிங்ஸ் அதிரடி காட்ட 205 ரன் குவித்து த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப்புக்கு எதிராக 198 ரன் இலக்கை சேஸ் செய்த சிஎஸ்கே 193 ரன் எடுத்து 4 ரன்னில் தோற்றது. அப்போட்டியில் கேப்டன் டோனி அபாரமாக ஆடினார். இப்படி, 3 போட்டியிலும் சிஎஸ்கே வீரர்கள் யாராவது ஒருவர் அணியை தாங்கிப் பிடித்து சிறப்பாக விளையாடியுள்ளனர். பந்துவீச்சில் வாட்சன், சர்துல் தாகூர் வேகத்திலும், சுழலில் இம்ரான் தஹிர், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.  எனவே, இன்றைய போட்டியிலும் சிஎஸ்கே வீரர்களிடமிருந்து த்ரில் வெற்றியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட் செய்து வருகிறார். இவர் 4 போட்டியில் 185 ரன் எடுத்துள்ளார். ஆனால்  மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து இவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கேப்டன் ரகானே மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே, சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள், சஞ்சு சாம்சன் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டியது அவசியம். இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.சிஎஸ்கே: டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, பிராவோ,  அம்பாதி ராயுடு, இம்ரான் தஹிர், ஷேன் வாட்சன், ஹர்பஜன் சிங், முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், சிதிஷ் ஷர்மா, மோனு குமார், பிஸ்னோய், கர்ன் ஷர்மா, சர்துல் தாகூர், ஜகதீசன், டுபிளஸ்சி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், நிகிடி, தீபக் சாஹர், ஆசிப், கனிஷ்க் சேத், துருவ் ஷோரே.ராஜஸ்தான்: கிளாசன், பெஞ்சமின் ஸ்டோக்ஸ், உனாத்கட், சஞ்சு சாம்சன், ஆர்சர், கிருஷ்ணப்பா கவுதம், ஜோஸ் பட்லர், ரகானே (கேப்டன்), ஷார்ட், ராகுல் திரிபாதி, தாவல் குல்கர்னி, ஜாகிர் கான் பக்தீன், பென் லாக்ளின், ஸ்டூவர்ட் பென்னி, சமீரா, அனுரீத் சிங், விக்ரம் பிர்லா, மிதுன், ஸ்ரேயாஷ் கோபால், பிரசாத் சோப்ரா, சக்சேனா, அன்கித் ஷர்மா, லோம்ரோர்.

மூலக்கதை