சிஎஸ்கே அணியின் போட்டியை பார்க்க சென்னையில் இருந்து புனேக்கு தனி ரயிலில் சென்ற ரசிகர்கள்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னையிலிருந்து 1000 ரசிகர்கள் தனி ரயிலில் புனேக்கு புறப்பட்டு சென்றனர். விசில்போடு எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்ட அந்த ரயில் இன்று காலை புனே சென்றடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 10ம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், மற்ற 6 போட்டிகளும் புனேக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றத்துக்கு சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி, சிஎஸ்கே வீரர்களும் கவலை தெரிவித்தனர்.  இந்நிலையில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதும் போட்டி புனேவில் இன்று நடைபெற உள்ளது. அங்கு அணியை உற்சாகப்படுத்த சென்னையில் இருந்து ரசிகர்களை அழைத்துச் செல்ல சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ‘விசில் போடு’ எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது.நேற்று காலை 8.40 மணிக்கு  சென்னை சென்ட்ரலில் இருந்து   தனி ரயில் புனே புறப்பட்டுச் சென்றது. மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும்  இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள ஒரு ஏசி உட்பட 18  பெட்டிகள் மூலம் 1000 ரசிகர்கள் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கான பயணம், தங்குமிடம், உணவு, ேபாட்டிக்கான அனுமதி சீட்டு, அணியின் மஞ்சள் வண்ண விளையாட்டு டிஷாட், உள்ளூர் பயண வசதி என அனைத்து வசதிகளையும் சிஎஸ்கே அணி நிர்வாகமே செய்கிறது.சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட ரயில் ரேணிகுண்டா, குண்டக்கல், வாடி, சோலப்பூர், தவுண்ட் வழியாக இன்று காலை 5 மணிக்கு புனே சென்றடையும்.   போட்டி முடிந்ததும் மறுநாள் (ஏப்.21) புனேவில் இருந்து  பகல் 11.15 மணிக்கு புறப்படும்  தனி  ரயில் ரசிகர்களுடன் ஏப்.22ம் தேதி காலை 8.50 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும். ‘‘இதேபோல் சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட எல்லா போட்டிகளுக்கும் சென்னையில் இருந்து தனி ரயில்கள் மூலம் ரசிகர்கள் புனேக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்’’ என்று சிஎஸ்கே அணியின் ஊடக மேலாளர் பாபா தெரிவித்தார்.

மூலக்கதை