காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்

சென்னை: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று, தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள் சதீஷ்குமார், அமல்ராஜ் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்’ என பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்ற சாதித்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஆகும். இதே போல, டேபிள் டென்னிஸ் ஆண்கள் குழு பிரிவில் இந்திய அணி 12 ஆண்டுக்கு பின் தங்கம் வென்று சாதித்தது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அமல்ராஜ். இருவரும் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.சென்னை விமானநிலையத்திற்கு வந்த சதீஷ்குமார் மற்றும் அமல்ராஜை அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சதீஷ்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:கடந்த 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் வெற்றி பெற்று பதக்கத்துடன் வந்தேன். அப்போதும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தீர்கள். இப்போதும் நம் நாட்டுக்கு தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்துள்ளேன். நீங்கள் அளிக்கும் உற்சாக வரவேற்புக்கு நன்றி.இந்த பதக்கத்தின் பின்னணியில் என் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அனைத்தும் அடங்கியுள்ளது. அதோடு நானும் விடாமுயற்சியுடன், கடும் பயிற்சியும் மேற்கொண்டேன். 2020ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிதான் எனக்கு மிக முக்கியமானது. அதை குறிக்கோளாக வைத்து தொடர்ந்து பயிற்சிகள் செய்வேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற வேண்டும் என தீவிரமாக விடாமுயற்சி எடுத்து வருகிறேன்.எனது குடும்பம் மிகவும் கஷ்டநிலையில் இருந்தபோது, எனது விளையாட்டு திறமைக்காக ரயில்வேயில் வேலை தந்து உதவினர். அதனால், அந்த பணியை நன்றி விசுவாசத்துடன் தொடர்ந்து செய்வேன். பதக்கம் வென்ற சில மணி நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதற்கு என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு அறிவித்துள்ள பணம் எனக்கு மட்டுமல்ல, வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளித்து, பயிற்சிகளை மேற்கொள்ள செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.சென்னை கொளத்தூரை சேர்ந்தவரான அமல்ராஜ் கூறுகையில், ‘‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. என் மூலம் தங்கம் பெற்றது சந்தோஷமாக இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

மூலக்கதை