சத்தீஸ்கர் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் 50 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன் விநியோகம்: முதல்வர் ராமன்சிங் தாராளம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சத்தீஸ்கர் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் 50 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன் விநியோகம்: முதல்வர் ராமன்சிங் தாராளம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. சஞ்சார் கிராந்தி யோஜனா திட்டத்தின் கீழ் 50 லட்சம் பேருக்கு இலவச செல்போன் தரப்படும் என ராமன்சிங் அண்மையில் தெரிவித்தார்.

அதன்படி, 50 லட்சம் பேருக்கு செல்போன்கள் வழங்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சஞ்சார் கிராந்தி யோஜனா திட்டத்தின் கீழ் 50 லட்சம் பேருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ராமன் சிங் மே மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செல்போன்கள் தரப்படும். இரு கட்டங்களாக மக்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட உள்ளது.



முதல் கட்டமாக 30லட்சம் பேருக்கு ஸ்மார்ட் போன்களும், 2-ம் கட்டமாக 20 லட்சம் பேருக்கு தரப்படுகிறது. இதில் கிராமத்தை சேர்ந்த 40 லட்சம் பெண்களுக்கும், நகரப்பகுதிகளில் வசிக்கும் 5 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு செல்போன் தரப்படுகிறது.

இதுதவிர்த்து, கல்லூரிமாணவ, மாணவிகளுக்கு 5 லட்சம் போன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த செல்போன்கள் அனைத்தும் முதல்வர் உத்தரவின் பேரில் உயர்ந்த தரத்துடன், நம்பகத்தன்மை மிகுந்த நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

செல்போன்கள் மூலம் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள் எளிதாக மக்களுக்கு கிடைக்கும்.

பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகமாக நடத்தவும் இந்த செல்போன்கள் தரப்படுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிற்பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது.

இதற்காக தயாராகும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

.

மூலக்கதை