பணத்தட்டுப்பாடு பிரச்சினை சீராகிறது: 80 சதவீத ஏ.டி.எம்கள் இயங்க துவங்கின

PARIS TAMIL  PARIS TAMIL
பணத்தட்டுப்பாடு பிரச்சினை சீராகிறது: 80 சதவீத ஏ.டி.எம்கள் இயங்க துவங்கின

ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாள்களாக மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லை. இதனால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களை தேடி அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

ரூ.2,000 நோட்டுகளின் கையிருப்பு போதிய அளவில் இல்லாதது, ரூ.200 நோட்டுகளை விநியோக்கும் வகையில் ஏடிஎம்களில் வசதி இல்லாதது உள்ளிட்டவை பணத் தட்டுப்பாட்டுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில், பொதுத் துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நிதியமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இதர வங்கிகள், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை சீரடைந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் 80 சதவீத மையங்கள் புதன்கிழமை இயங்கின. கடந்த 16-ஆம் தேதி நாடு முழுவதும் 60 சதவீத ஏடிஎம்களே இயங்கின. இந்த வார இறுதிக்குள் நிலைமை முழுமையாக சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

எனினும், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு புதன்கிழமையும் நீடித்தது. தில்லியிலும் சில ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை

மூலக்கதை