கவர்னர் பதவி விலகும் வரை தி.மு.க. போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
கவர்னர் பதவி விலகும் வரை தி.மு.க. போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடப்பது போல கவர்னர் நடந்து கொள்கிறார் என்றும், கவர்னர் பதவி விலகும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று, சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான தி.மு.க. தொண்டர்களை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போராட்டம் தொடரும்

போராசிரியர் பேசிய ஆடியோ சம்பந்தமாக பல மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று நேற்றே தெரிவித்தேன். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கவர்னர் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடக்கிறது, ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருப்பதுபோல, அவரே உத்தரவிட்டு, அவரே நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதை எல்லாம் பார்க்கின்றபோது, அவர் கவர்னர் பொறுப்புக்கு லாயக்கற்றவர், மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எங்குப் பார்த்தாலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதன்படி, தி.மு.க. சார்பில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில், கவர்னர் மாளிகையை நோக்கி ஒரு பேரணி நடைபெற்று, மறியல் போராட்டமும் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தி.மு.க. தொண்டர்களை கைது செய்தாலும், கவர்னர் பதவி விலகுகின்ற வரையிலோ அல்லது அவரை பதவியில் இருந்து நீக்குகின்ற வரையிலோ, இந்தப் போராட்டம் நிச்சயமாக தொடரும்.

மாநில சுயாட்சி

நாகரிகமற்ற முறையில், ஒரு பெண்ணின் கன்னத்தை தடவுகின்ற கீழ்த்தரமான நிலையில் ஒரு கவர்னர் இருப்பது தமிழ்நாட்டுக்கே ஒரு தலைகுனிவு என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கவர்னர், தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று சொன்னதற்கு, எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும். மாநில சுயாட்சிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் தி.மு.க. இதை கண்டிக்கிறது.

போராட்டங்கள் திட்டமிட்டு அமைவதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. இந்த ஆட்சியில் திடீர், திடீரென ஏற்படும் பிரச்சினைகள், அதிலும் கவர்னரே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தோற்றம் உருவாகி இருக்கின்ற காரணத்தால், எந்த நேரத்திலும், எந்தவித சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காவிரி பிரச்சினை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துகிறோம். வரும் 3-ந் தேதி இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அங்கு எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுத்து, அதன்படி செயல்படுவோம்.

பிரதமரை சந்திக்க கடிதம் எழுதியதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எந்தக்கடிதமும் வரவில்லை, கோரிக்கையும் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார். முதல்-அமைச்சரோ, துணை முதல்-அமைச்சரோ அல்லது அரசின் சார்பிலோ அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது விளக்கம் சொல்லப்பட்டதா? இந்த சூழ்நிலையில், நாங்கள் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில், எங்களுடைய தலைமையில் சென்று பிரதமரை சந்திக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

வலியுறுத்துவோம்

பிரதமரிடம் நேரம் கேட்டு ஒரு கடிதம் எழுதி, அந்தத் தீர்மான நகலுடன் அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் நேரம் அளித்தால், அனைவரும் சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.

அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தும் போது நாங்கள் எந்தக் கட்சியையும் நிராகரிப்பதில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை அரவணைத்து, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ராஜா போன்றவர்களின் சொல்லும் கீழ்த்தரமான கருத்துகளுக்கு பதில் சொல்லி, என்னை கொச்சைப்படுத்திக் கொள்ள நான் தயாராக இல்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை