ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

 
ஐ.பி.எல். போட்டியின் 15-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
 
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும், ஷார்ட்டும் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் விரைவில் அரை சதம் கடந்தது. ரகானே 19 பந்தில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 7 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
 
பொறுப்புடன் ஆடிய ஷார்ட்டை நிதிஷ் ரானா வெளியேற்றினார். ஷார்ட் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களாக இருந்தது. அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவர் 14 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ரானா, டாம் கர்ரன் ஆகியோர் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, பியுஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் களமிறங்கினர். லைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் நரேன் உடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். நரேன் 25 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
 
அதைத்தொடர்ந்து நிதிஷ் ரானா களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய உத்தப்பா 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் நிதிஷ் ரானா உடன், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். கொல்கத்தா அணி ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. ரானா 35 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
 
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நாளை நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #IPL2018 #RRvKKR #KKRvRR 
 

மூலக்கதை