CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை... மும்பை ஐகோர்ட் அதிரடி

தினகரன்  தினகரன்

மும்பை: புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் அண்ணா சாலையே ஸ்தம்பித்துவிட்டதால் வீரர்களும், ரசிகர்களும் மைதானத்தை வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்திற்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன. இதனையடுத்து போட்டி எங்கு நடத்துவது என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக ஆலோசனை நடத்தியது. இதில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது. எனவே சென்னையில் நடத்த திட்டமிட்ட மொத்தம் 7 போட்டிகளில் ஒன்று மட்டும் நடைபெற்றது. மீதமுள்ள 6 போட்டிகளை புனேவில் நடத்த தயாராக உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியும் ஒப்புதல் அளித்தது. திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் புனேவில் நடைபெறும் என்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புனேவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை