மத்திய அமைச்சர்களுடன் நியமன எம்எல்ஏக்கள் சந்திப்பு: வாரியத் தலைவர் பதவிகளில் பாஜவினரை நியமிக்க ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அமைச்சர்களுடன் நியமன எம்எல்ஏக்கள் சந்திப்பு: வாரியத் தலைவர் பதவிகளில் பாஜவினரை நியமிக்க ஆலோசனை

புதுச்சேரி: புதுவை பாஜ மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நியமன எம்எல்ஏக்கள் 2வது நாளாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய அமைச்சர்கள், கட்சி தேசிய தலைமையை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அப்போது புதுவையில் பாஜகவுக்கு 13 வாரியத் தலைவர் பதவிகளையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவையில் மாநில அரசின் பரிந்துரையின்றி பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு கவர்னர் மூலம் நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது.

இதை எதிர்த்து காங்கிரஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கில் நியமன எம்எல்ஏக்கு சாதகமான தீர்ப்பை ஐகோர்ட் வழங்கிய பிறகும் சபாநாயகர் வைத்திலிங்கம் 3 பேரையும் சபைக்குள் அங்கீகரிக்கவில்லை.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு ஓரிரு நாளில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பாஜக நியமன எம்எல்ஏக்களான சாமிநாதன், சங்கர் இருவரும் நேற்று கட்சித் தலைமை அவசர அழைப்பின் பேரில் டெல்லி விரைந்தனர்.

இன்று 2வது நாளாக முகாமிட்டுள்ள பாஜக நியமன எம்எல்ஏக்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுதவிர பாஜக தேசிய தலைமையையும் நியமன எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அப்போது புதுவை அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. நியமன எம்எல்ஏக்களை மட்டுமின்றி பாஜகவினருக்கு வாரியத் தலைவர் பதவிகளையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை இடம்பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னர் மூலம் இதுதொடர்பான அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் ஆட்சியாளர்களுக்கு கசிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்க முடிவெடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் இருவரும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றன. காங்கிரஸ் மட்டுமின்றி திமுகவுக்கும் வாரியத் தலைவர் பதவிகளை ஒதுக்க முடிவெடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, நேற்று நாராயணசாமி சந்தித்து இதுதொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி பட்டியலை இறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் வாரியத் தலைவர் நியமன விவகாரம் புதுவையில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

.

மூலக்கதை