ஹாட்ரிக் தோல்விக்கு பின் மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றி: ரோகித் விளாசலில் வீழ்ந்தது ஆர்சிபி

தினகரன்  தினகரன்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் ஹாட்ரிக் தோல்விக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 46 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பந்துவீசியது. தொடர்ச்சியாக 3 போட்டியில் தோற்றதால், மும்பை அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்கியது. சூரியகுமார் யாதவ், எவின் லீவிஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் சூரியகுமார், 2வது பந்தில் இஷான் கிஷண் கிளீன் போல்டாகி பரிதாபமாக வெளியேற மும்பை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.இந்த நிலையில், எவின் லீவிஸ் - கேப்டன் ரோகித் ஷர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த எவின் லூயிஸ், 65 ரன் விளாசி (42 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் டி காக் வசம் பிடிபட்டார். 32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மா பின்னர் அதிரடியாக ரன் குவித்தார். இதனால் மும்பையின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. குருணல் பாண்டியா 15, போலார்ட் 5 ரன்னில் வெளியேறினர். சதத்தை நெருங்கிய ரோகித் ஷர்மா 94 ரன்னில் (52 பந்து, 5 சிக்சர், 10 பவண்டரி) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் கோஹ்லியை தவிர யாருமே நிலைக்கவில்லை. டிகாக் (19), டிவில்லியர்ஸ் (1) இருவரும் மெக்கிளானகன் பந்தில் ஆட்டமிழந்தனர். குருணல் பாண்டியாவின் 10வது ஓவரில், அடுத்தடுத்த பந்தில் மன்தீப் சிங் (16), ஆண்டர்சன் (0) வெளியேறினர். தனது அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தரையும் (7) வெளியேற்றி, ஆர்சிபியை தடுமாறச் செய்தார் குருணல். பும்ரா தன் பங்குக்கு வோக்ஸ் (11), உமேஷ் யாதவ் (1) விக்கெட்டை வீழ்த்தினார். சர்பிரஷ் கான் (5) மார்கண்டே பந்தில் ஆட்டமிழந்தனர். ஒரே முனையில் விக்கெட்டுகள் சரிய கோஹ்லி மட்டும் தனி ஆளாக போராடி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து தோற்றது. கோஹ்லி 62 பந்தில் 92 ரன்னுடன் (4 சிக்சர், 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூலக்கதை