குந்துகால் மீன்பிடி இறங்குதளப் பணிகள்குறித்து மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வு!

விகடன்  விகடன்
குந்துகால் மீன்பிடி இறங்குதளப் பணிகள்குறித்து மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் கடற்கரைப் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் தெரிவித்தார்.

 பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களில் பெரும்பகுதியினர், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கும், சிறைபிடிப்புக்கும் உள்ளாகிவருகின்றனர்.  குறைந்த கடல் பகுதி, இலங்கை மீனவர்களின் எதிர்ப்பு, மீன் இனப்பெருக்கம் குறைவு, படகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, டீசல் மற்றும் மீன்பிடிச் சாதனங்களின் விலை உயர்வு போன்றவற்றால், இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் கரை திரும்பும் வரை அவர்களது குடும்பத்தினர் மன சஞ்சலத்துடனேயே காத்திருக்கும் நிலை உள்ளது. 

இந்நிலையைப் போக்க, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதில், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடத் தேவையான படகை மானிய விலையில் பெறுவதற்கான திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஆழ்கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, ரூ.70 கோடி செலவில் பாம்பன் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. 
 

இந்தச் சூழலில், வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் சஞ்சய் பாண்டா, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பிந்தரா நவ்னிக் , காலநடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணைச் செயலாளர் ராஜேஸ், தமிழக மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர், மீன்பிடி இறங்குதளம் அமைய உள்ள குந்துகால் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் கோபால், ''குந்துகால் மீன் இறங்குதளப் பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும். இதைத் தொடர்ந்து, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப் பயன்படும் படகுகள் கட்டும் பணிகள் கொச்சியில் நடந்துவருகிறது. இந்த பணிகள் முடிந்து, தேர்வுசெய்யப்பட்ட மீனவர்களிடம் படகுகள் ஒப்படைக்கப்படும். இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் நடந்துவரும் துறைமுகப் பணிகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவடையும்'' என்றார்.
 

மூலக்கதை