ரூ. 25 கோடிக்கு நான் ஒர்த் இல்லை பாஸ்! - கதறும் முன்னாள் எம்.எல்.ஏ

விகடன்  விகடன்
ரூ. 25 கோடிக்கு நான் ஒர்த் இல்லை பாஸ்!  கதறும் முன்னாள் எம்.எல்.ஏ

'25 கோடி ரூபாய் கடன் கொடுக்கும் அளவுக்கு வசதி என்னிடம் கிடையாது' என்று முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின் தெரிவித்தார். 

 சென்னை, தி.நகரில் செயல்பட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த மிதுன் தாமஸ் என்பவர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி புகார் கொடுத்தார். அதில், 'தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வினிடம் கடனாகப் பணம் கேட்டிருந்தேன். சம்பவத்தன்று 25 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகளைப் பத்து பைகளில் எனக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவத்தை, முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பினர் வீடியோவாக எடுத்துள்ளனர். பிறகு, கடந்த 30.3.2018ல் அடியாட்களுடன் வந்து, 35 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகக்கூறி, என்னையும் ஊழியர்களையும் தகாதவார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் டேவிட் செல்வின், வெங்கடேஷ், சந்தோஷ், சீனிவாசன் மற்றும் சிலர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சமயத்தில் அரசியல் செல்வாக்கு மற்றும் போலீஸ் உயரதிகாரிகளின் தலையீடு காரணமாக, எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. 

இதுகுறித்து டேவிட்செல்வின் கூறுகையில், "என் மீது மிதுன் தாமஸ் என்பவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் என்பவரிடம் பிசினஸ் சம்பந்தமாக 35 லட்சம் ரூபாயைக் கடந்த மார்ச் 28-ம் தேதி கொடுத்தேன். அதன்பிறகு அவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனக்கு 35 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். இதனால்தான் பணத்தைக் கேட்டு சண்முகத்தின் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு நானும், என்கூட வந்தவர்கள் யாரையும் மிரட்டவில்லை. மிதுன் தாமஸ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது என்ன நடந்தது என்று போலீஸாரிடம் விளக்கமாகத் தெரிவித்தேன். இதற்கிடையில், என்னைத் தொடர்புகொண்ட சண்முகம், 'புகார் கொடுத்த மிதுன் தாமஸ் தன்னுடைய கம்பெனியில் வேலையே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். சண்முகம், தற்போது சென்னையில் இல்லாததால், அவரிடம் போலீஸார் விசாரணை செய்யவில்லை. 25 கோடி ரூபாய் கடன் கொடுக்கும் அளவுக்கு வசதி என்னிடம் கிடையாது. சம்பந்தப்பட்ட நிறுவனம், 2000 கோடி ரூபாய் வரை வரவு-செலவு செய்யும் நிறுவனம்,  என்னிடம் 25 கோடி கடன் கேட்பார்களா?  கடன் கேட்பவர்களுக்கு எந்த முட்டாள், செல்லாத பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுப்பான்? நான் மிரட்டியிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் அந்தக் காட்சிகள் பதிவாகியிருக்கும். எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமலிருக்க இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்" என்றார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மிதுன் தாமஸ் கொடுத்த புகாரின்பேரில் டேவிட்செல்வின், வெங்கடேஷ், சந்தோஷ், ஆகியோர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், டேவிட்செல்வின் தரப்பில் பணம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரமும் இருக்கிறது. அதுகுறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசித்து, ஆர்.பி.ஐ-க்குத் தகவல் தெரிவிக்கப்படும். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட்செல்வின் தரப்பினர், வரும் தகவல் தவறானது"என்றனர். 

மூலக்கதை