பேராசிரியை நிர்மலா தேவி கைது! - போலீஸார் அதிரடி

விகடன்  விகடன்
பேராசிரியை நிர்மலா தேவி கைது!  போலீஸார் அதிரடி

மாணவிகளைத் தவறாக வழிநடத்தியாக எழுந்த புகாரில், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில், இன்று கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மாதர் சங்க நிர்வாகி நிர்மலா ராணி, பெண்களைத் தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலாதேவிமீது வழக்கு பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகக் கூறியதால், கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 3 பிரிவுகளின்கீழ் பேராசிரியை நிர்மலா தேவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவரைக் கைது செய்ய வீட்டின் முன் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் அவர், வீட்டை உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு 3 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளேயே இருந்தார். கதைவை உடைத்து வீட்டுக்குள் செல்ல விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி.மதி, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி தனபால் தாசில்தாரிடம் ஆலோசித்தனர். பத்திரிகையாளர்களை அனுப்பினால் மட்டுமே, வீட்டைவிட்டு வெளியேறுவேன் என நிர்மலா தேவி போலீஸாரிடம் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வீட்டை விட்டு பத்திரிகையாளர்கள் விலகிச் சென்ற பின்னர், நிர்மலா தேவியைக் கைது செய்த போலீஸார், உடனடியாக அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 
 

மூலக்கதை