மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

விகடன்  விகடன்
மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

புகழ்பெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிநாடு கண்மாயைச் சுற்றி வளர்ந்திருக்கும் பனைமரங்கள் சமூக விரோதக் கும்பலால் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருகில் உள்ள பெருமநாடு சாலையில் அமைந்திருக்கிறது கவிநாடு கண்மாய். புதுக்கோட்டை மாவட்டத்தின் வீராணம் ஏரி என்றுகூட இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். 'காகம் குறுக்கே பறக்காத கவிநாடு கண்மாய்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற இப்போது வறண்டு காணப்படுகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி கண்மாயைச் சுற்றியுள்ள பனை மரங்களை வெட்டி வருகிறது ஒரு சமூக விரோதக் கும்பல். 1,200 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்தக் கண்மாயின் நீளம் எட்டு கிலோ மீட்டராகவும் அகலமும் அதே எட்டுக் கிலோ மீட்டராகவும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் 2,000 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கண்மாய் விரவிக்கிடக்கிறது. ஆற்றுப் பாசனம் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற கண்மாய் நீர்நிலைகளைக் கொண்டுதான் முப்போகம் விளைச்சலை முன்னோர்கள் விளைவித்திருக்கிறார்கள்.

அதுபோல், நீர் மேலாண்மையிலும் அவர்கள் எப்படிச் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு இதுபோன்ற கண்மாய்களே சிறந்த உதாரணம். இந்தக் கண்மாய்க்கு கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. இதுபற்றி தொல்லியல் ஆர்வலர் கந்தர்வக்கோட்டை ஆ.மணிகண்டன் பேசும்போது, "கி.பி 872-ல் பாண்டியன் மாறன் சடையன் ஆண்ட காலத்தில், வல்லநாடு என்று இப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள  கவிர்பால் எனும் ஊரைச் சார்ந்த மூதாண்டி பெருந்திணை எனும் அதிகாரியால் இந்தக் குளம் வெட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரச் செய்தி அங்குள்ள மடையில் உள்ளது. அதேபோல், கலிங்கு ராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்ட கல்வெட்டும் இங்கே உள்ளது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குளத்தின் உட்பரப்பில் பேராசிரியர் சந்திரபோஸ், முனைவர். ஜம்புலிங்கம் குழுவினரால் அடையாளம் காணப்பட்ட உடைந்த சமணர் சிலையும் சமணக் கோயிலின் கல் கட்டுமான சிதிலங்களும் விரவிக் கிடக்கின்றன. ஒரே மடையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு பின்னர், அது தொட்டி போன்ற சேகரிப்பு கலனிலிருந்து ஐந்து வாய்க்கால்களாகப் பாசனத்துக்குச் செல்கிறது. இந்தக் கண்மாய் நிரம்பி வழியும்போது, கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கரைகளைச் சுற்றி பலவகையான மரங்கள் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. அதில் பனைமரங்களும் உண்டு. காலங்கள் கடந்து கண்மாய் வறண்டு போனாலும் அந்தப் பனைமரங்கள் மட்டும் செழித்துக் கிடந்தன. தற்போது, அந்தப் பனை மரங்களை முழுவதுமாக வெட்டி வருகிறது ஒரு கும்பல். இதைத் தடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கண்மாயையும் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

மூலக்கதை