மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியை நிர்மலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியை நிர்மலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான்
பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்  நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியின் செயலாளர் ராமசாமி இதுபற்றி கூறியதாவது:-

மாணவிகளிடம்  பாலியல்  வற்புறுத்தல் குறித்து 3 மூத்த பேராசிரியர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி என்னிடம் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் நிர்மலா தேவி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு குறித்து நிர்மலாதேவி பதில் அளிக்க கூறி உள்ளோம். பதில் கிடைத்தவுடன் கல்லூரி அளவில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் நலன் பாதுகாக்கப்படும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை கூறியதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தில் புகழ்மிக்க பல்கலைக்கழகம் ஆகும். இந்த புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற
சம்பவங்கள் கூறப்படுகிறது.

தனியார் கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக சிண்டிகேட் துணை கமிட்டி அளவிலான விசாரணை கமிஷன்  அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  கடந்த மாதமே இந்த புகார் பல்கலைக்கழகத்திற்கு வந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானிய குழுவின் நிதிகளை பெறுவதற்காக சில முறைகேடுகளை  அரங்கேற்றம் செய்யும் முயற்சியாக இது இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியை  மீது   மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் அதிர்ச்சியானது; முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது; விருதுநகர் எஸ்.பி. யிடம் உயர்கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்படும் என  உயர்கல்வித் துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறி உள்ளார்.

மூலக்கதை