பர்வத மலையில் காட்டுத்தீ..! பக்தர்கள் அச்சம்

விகடன்  விகடன்
பர்வத மலையில் காட்டுத்தீ..! பக்தர்கள் அச்சம்

பர்வத மலை காட்டுப்பகுதியில், நேற்று இரவு முதல் காட்டுத்தீ பரவி எரிந்துகொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலை, புகழ்பெற்ற சிவத்தலமாகும். தென் கயிலை, சஞ்சீவிகிரி, பர்வதகிரி, கந்த மலை, நவிர மலை,  திரிசூலகிரி, மல்லிகார்ஜுன மலை என்று பல்வேறாக அழைக்கப்படும் இந்தப் புனித மலை, சுமார் 5,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பிரம்மராம்பிகா சமேத மல்லிகார்ஜுன ஸ்வாமி அருள்பாலிக்கும் இந்த பர்வத மலையில் அரியவகை மரங்களும், ஏராளமான மூலிகைச் செடிகளும் பெருமளவு உள்ளன.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள பர்வத மலை காட்டுப் பகுதியில், நேற்று இரவு முதல் காட்டுத்தீ பரவி எரிந்துவருகிறது. கடுமையான இந்தக் கோடையால் உருவான இயற்கைத் தீயா? அல்லது சமூக விரோதிகள் உருவாக்கிய தீயா என்பது புரியாமல், வனத்துறையும் தீயணைப்புத்துறையும் ஒருங்கிணைந்து, தீயை அணைக்கப் போராடிவருகிறார்கள். இந்தத் தீ விபத்தால் அங்கிருக்கும் காட்டு விலங்குகளும், அரிய வகைத் தாவரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று, சித்திரை அமாவாசை முடிந்த நிலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பக்தர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. காற்றின் வேகம், வெயிலின் உக்கிரம் காரணமாக தீ வேகமாகப் பரவிவருகிறது. இந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் பெரிதும் முயன்றுவருகிறார்கள்.

மூலக்கதை