சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு

திருப்பதி: சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் இன்று அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பிக்கள் நாடாளுமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இருப்பினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைகண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பந்த்துக்கு அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பந்த் நடைபெறுகிறது.

இதையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், வேன்கள், கார்கள் என அனைத்து வாகனங்களும் ஓடவில்லை.

பெட்டிக்கடைகள் முதல் ஓட்டல்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பஸ் நிலையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சியினரும் பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பதி பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

பைக் முற்றிலும் எரிந்து சேதமானது. இதேபோல் மாநிலம் முழுவதும் பந்த் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

170 பஸ்கள் நிறுத்தம் தமிழக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தில் இருந்து சித்தூர், திருப்பதி உள்பட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 120 இருமாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் சுழற்சி முறையில் தினமும் 180 முறை ஆந்திராவுக்கு சென்று வருகின்றன.

இதுதவிர 50 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று ஆந்திராவில் பந்த் நடப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் தமிழக-ஆந்திர எல்லை வரை இயக்கப்பட்டது’ என்றனர். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் இன்று வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

திருமலைக்கு பஸ்கள் இயக்கம்: திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

ஆனால் இன்று அதிகாலை வெளியூர்களில் இருந்து திருப்பதிக்கு வந்த பஸ்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அங்கிருந்து திருப்பதி பஸ் நிலையத்திற்கு நடந்து வந்தனர்.

இருப்பினும் அங்கிருந்து பஸ்கள் செல்லாததால் பஸ்நிலையத்திலேயே காத்திருந்தனர்.

கடந்த 2 நாட்களாக விடுமுறை என்பதால் திருமலையில் திரண்டிருந்த பக்தர்கள் இன்று தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

.

மூலக்கதை