மத்திய அரசு ரூ.8000 கோடி நிறுத்தம் கடும் நிதி நெருக்கடியில் ஆந்திர அரசு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசு ரூ.8000 கோடி நிறுத்தம் கடும் நிதி நெருக்கடியில் ஆந்திர அரசு

அமராவதி: ஆந்திராவில், தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.

ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிந்ததை அடுத்து, அமராவதியில் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இம்மாநிலத்தில், போலாவரம் நீர் பாசன திட்டம் உள்ளிட்ட மேலும் பல பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி வந்து சேராததால், ஆந்திர அரசு, கடும் நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர அரசின் நிதித்துறை தொடர்பான மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, குறித்த நாளில் பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில், 7. 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு, ஒவ்வொரு மாத முடிவில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும். ஆனால், ஆந்திர அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் மென்பொருள் பிரச்னையால், கடந்த மாதம், குறித்த நாளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமான நாளில் சம்பளம் தரப்படவில்லை.

மென்பொருள் கோளாறால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களில் பெரும்பாலானோருக்கு, இம்மாதம், 7ம் தேதி தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. அதிலும், 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்னும் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.



மென்பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய, நிதித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, ஆந்திர நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் வர வேண்டும்.

மத்திய அரசு தரவேண்டிய நிதியுதவி தாமதமாகி வருவதால், ஆந்திர அரசின் நிதி இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 8,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பயன்படுத்தப்படும் சாப்ட்வேரிலும் பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன; அவை சரி செய்யப்பட வேண்டும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, சம்பளம் செலுத்தும் பணி முடங்கியது.

ஆந்திர அரசின் பல திட்ட பணிகளுக்கான பணப் பட்டுவாடாவும், பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

.

மூலக்கதை