நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில் இளவரசி மகன் விவேக், கிருஷ்ணபிரியா அப்போலோ டாக்டர் உட்பட 8 பேர் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில் இளவரசி மகன் விவேக், கிருஷ்ணபிரியா அப்போலோ டாக்டர் உட்பட 8 பேர் ஆஜர்

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த வெங்கட்ரமணன், இளவரசி மகள் கிருஷ்ண பிரியா, மகன் விவேக், அப்போலோ மற்றும் அரசு டாக்டர்கள் உட்பட 8 பேர் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகினர். அவர்களிடம், சசிகலா வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.


ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சார்பில், 30க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி உள்ளார்.

விசாரணை ஆணையத்தில் ஆஜரான பலர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகச்சாமி, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு சசிகலாவின் வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கினார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனை டீன் நாராயணபாபு, ஏப்ரல் 6ம் தேதி டாக்டர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி, எம். என். சங்கர், ஏப்ரல் 7ம் தேதி முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர்கள் முரளிதரன், தினேஷ் ஆகியோரிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.இந்த நிலையில் ஏப்ரல் 16ம் தேதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 8 பேருக்கு சம்மன் அனுப்பபட்டது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணியளவில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், அப்போலோ டாக்டர் சத்யபாமா, அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமி நாதன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி (ஜெயலலிதாவின் தனி பிரிவு செயலாளராக இருந்தவர்) வெங்கட்ரமணன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், போயஸ் கார்டன் சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் ஆஜராகினர்.

அவர்களிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தனி, தனியாக அழைத்து குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது அவர்களிடம், ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது பார்த்தீர்களா, ஜெயலலிதாவை யார், யார் மருத்துவமனையில் சந்தித்தனர், ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் யார், யாரிடம் தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணையின் போது எழுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், விசாரணை ஆணையத்தில் அவர்கள் அளித்த சாட்சிகள் குறித்தும் சில கேள்விகளை சசிகலா வழக்கறிஞர் எழுப்பினார். இதற்கு அவர்கள், உரிய விளக்கம் அளித்தனர்..

மூலக்கதை