முயல் வேட்டை திருவிழா கிராமங்களில் கோலாகலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முயல் வேட்டை திருவிழா கிராமங்களில் கோலாகலம்

பெரம்பலுார்: ஆண்டுதோறும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர், எசனை, குரும்பலுார், லாடபுரம், துறைமங்கலம், கோனேரிபாளையம், பாடாலுார், விஜயகோபாலபுரம், கூத்தனுார், நக்கசேலம், சிறுவயலுார், டி. களத்துார், கள்ளப்பட்டி, பெரியம்மாபாளையம், தொண்டாமாந்துறை, அரசலுார், அன்னமங்கலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், முயல் வேட்டை திருவிழா நடைபெறும். நேற்று சித்திரை முதல் ஞாயிறு என்பதால் இக்கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா நடந்தது. வீட்டுக்கு ஒருவர் வீதம், கிராமங்களில், முயல் வேட்டைக்கு செல்வதற்காக, அந்தந்த கிராமத்தின் மாரியம்மன் கோயில்கள் முன் காலை 7 மணியளவில் ஆண்கள் மட்டும் கூடினர்.

அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூசாரிக்கு அருள்வந்து சாமியாடினார்.வேட்டைக்கு செல்லும் திசை மற்றும் வேட்டையின்போது, கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை  குறித்து அப்போது அவர் குறி சொன்னார். சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள் என 50க்கும்மேற்பட்டோர், குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல்வேட்டைக்கு கிளம்பினர்.

மாலை 4 மணி வரை முயல்வேட்டையில் ஈடுபட்டு, வேட்டையாடிய முயல்களுடன் குறிப்பிட்ட பகுதியில் மாலையில் கூடினர். பின்னர் வேட்டையாடிய முயல்களை குச்சிகளில் தோரணம் போல் தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆட்டுக் கறி பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.


.

மூலக்கதை