9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்

வாஷிங்டன்: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் சுமார் 9 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டியிருக்க கூடும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் இந்நிறுவனம் தலையிட்டதாக காங்கிரசும், பாஜவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

தகவல்கள் திருட்டு தொடர்பாக  விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முன் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 9 கோடி பேரின் தகவல்கள் இங்கிலாந்து நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பெர் கூறுகையில், இதுவரை மொத்தமாக 8 கோடியே 70 லட்சம் மக்களின் தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டு இருக்க கூடும்.



இதில் பெரும்பாலும் அமெரிக்க மக்களுடையது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு தான் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை பேஸ்புக் மேற்கொண்டு உள்ளது என்றார். இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த  11 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது.

சுமார் 5. 6 லட்சம் இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அந்த எண்ணிக்கையை தாண்டும் வகையில் அமைந்துள்ளது பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை