சவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்

ரியாத்,: அரபு நாடுகளில் மிகப்பெரியதும், எண்ணெய் வளம் மிக்கதுமான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது.

மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் இதற்கு சவுதி அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.

சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. சவுதி அரேபியாவில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

தமிழ்ப்படங்களும் அங்கு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை