ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்

கோல்டு கோஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கடந்த 1930ம் ஆண்டு முதல், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 21வது தொடர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில், இன்று தொடங்கியுள்ளது.

மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.



இந்தியா சார்பில், 218 வீரர், வீராங்கனைகள், 17 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் பேட்மின்டன் வீரர், வீராங்கனைகளான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி. வி. சிந்து, சாய்னா நெஹ்வால், துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளான ஜித்து ராய், ஹூனா சித்து, மனு பாகர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர், வீராங்கனைகளான சுஷில் குமார், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபகாலமாக காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. எனவே இம்முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.



கடற்கரை நகரமான கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அனைத்து நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், இந்திய மூவர்ண கொடியை ஏந்தி வரும் கவுரவம், பி. வி. சிந்துவுக்கு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 35 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும்.

போட்டிகள் அனைத்தும் நாளை முதல் நடைபெறுகின்றன. வரும் 15ம் தேதியுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைகின்றன.



* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை, 155 தங்கம், 155 வெள்ளி, 128 வெண்கலம் என மொத்தம் 438 பதக்கங்களை வென்றுள்ளது.
* இந்தியா இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளது.

இந்த தொடர் கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. இதில், இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று 2வது இடம் பிடித்தது.

இதுதான் காமன்வெல்த் விளையாட்டு தொடர் ஒன்றில் இந்தியாவின் சிறந்த நிலையாகும்.

 
* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை, ஆஸ்திரேலியா 5வது முறையாக நடத்துகிறது.  

.

மூலக்கதை