கோஹ்லியா... பதறும் இங்கிலாந்து * கவுன்டி பயிற்சிக்கு கடும் எதிர்ப்பு | மார்ச் 27, 2018

தினமலர்  தினமலர்
கோஹ்லியா... பதறும் இங்கிலாந்து * கவுன்டி பயிற்சிக்கு கடும் எதிர்ப்பு | மார்ச் 27, 2018

 லண்டன்: ‘‘கோஹ்லியை கவுன்டி போட்டியில் அனுமதிக்கக் கூடாது. இது முட்டாள்தனம்,’’ என, இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் எச்சரித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் 3 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் கொண்ட தொடரில், வரும் ஜூலை–செப்டம்பர் மாதம் பங்கேற்கவுள்ளது. அன்னிய மண்ணில் டெஸ்டில் அடையும் தோல்விகளை தவிர்க்கும் வகையில், இனிமேல், ஒருநாள், ‘டுவென்டி–20’ முடிந்த பின், கடைசியாக டெஸ்டில் விளையாட இந்திய அணி முடிவு செய்துள்ளது.

இதற்கான இந்திய அணி கேப்டன் கோஹ்லியின், டெஸ்ட் சராசரி இங்கிலாந்து மண்ணில் 13.40 ரன்களாக உள்ளது. இவரது ரன்குவிப்பை பொறுத்து தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் இருக்கும் என நம்பப்படுவதால், இம்முறை ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின், கவுன்டி சாம்பியன்ஷிப்பில், சர்ரே அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார் கோஹ்லி.

கவுன்டி ஏன்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாப் வில்லிஸ் கூறியது:

கவுன்டி போட்டிகளில் அன்னிய வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், வளர்ந்து வரும் நமது இளம் வீரர்களுக்கு, இது எந்த வகையிலும் உதவியாக இருக்காது என்று தான் கூறுகிறேன். இங்கிலாந்தின் திறமையான வீரர்கள், இத்தொடரில் தொடர்ந்து விளையாடி, இங்கிலாந்து அணியின் தரத்தை உயர்த்தவே, கவுன்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இது சரியல்ல

இந்தியாவுக்கு எதிராக முக்கியமான டெஸ்ட் தொடர் வரவுள்ள நேரத்தில், இந்திய அணி கேப்டன் கோஹ்லியை இங்கு விளையாட அனுமதிப்பது முட்டாள்தனமானது. இங்கு அவரது சராசரி குறைவாக உள்ளது. தவிர, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன், இதுபோல பயிற்சி எடுப்பதால், கோஹ்லி பேட்டிங் திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாப் வில்லிஸ் கூறினார்.

மூலக்கதை