திருப்பூர் பெண் நதியா கொலை செய்யப்பட்ட வழக்கு - சித்தி மகள் உட்பட இருவர் கைது!

விகடன்  விகடன்
திருப்பூர் பெண் நதியா கொலை செய்யப்பட்ட வழக்கு  சித்தி மகள் உட்பட இருவர் கைது!

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் தற்போது பிடிபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி, பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 14-ம் தேதியன்று பூபாலன், வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட, மனைவி நதியா மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். மேலும் அன்றைய தினம் இரவு வீட்டில் மர்மமான முறையில் நதியா கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நதியாவின் உடலை  மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது. 

இந்நிலையில் நதியாவை அவரது சித்தி மகளே ஆள் வைத்து கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தற்போது கண்டறிந்துள்ளனர். கணவர் பூபாலனுக்கும், நதியாவின் சித்தி மகளான ரேகா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், அதற்கு நதியா இடையூறாக இருந்ததன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ரேகாவுக்கு ஏற்கனவே கஜேந்திரன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் நாகராஜ் என்பவருடன் ரேகாவுக்கு ஏற்பட்ட தவறான தொடர்பை அறிந்த கஜேந்திரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரேகாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வேளையில், நதியாவின் கணவர் பூபாலனுடன் ரேகாவுக்கு தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. 

எனவே ரேகாவின் விவாகரத்து வழக்கு முடிவடைந்ததும், பூபாலன் அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறார். ஆனால் நதியா இருந்தால் எதிர்காலத்தில் தன்னால் பூபாலனுடன் சுதந்திரமாக இருக்க முடியாது என கருதிய ரேகா, தன்னுடைய பழைய ஆண் நண்பர் நாகராஜை வைத்து நதியாவை கொலை செய்திருக்கிறார். கடந்த மார்ச் 14-ம் தேதியன்று நதியாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நகராஜை அனுப்பி கொலை சம்பவத்தில் ஈடுபட வைத்திருக்கிறார் ரேகா. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த ஒரே வாரத்துக்குள், தனிப்படை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பாராட்டப்பட்டு இருக்கிறது.

மூலக்கதை