காசநோய் தகவல்களை மறைக்கும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறை: மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: காசநோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால், டாக்டர்கள், ஹாஸ்பிடல் ஊழியர்கள், பார்மசிஸ்ட்ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:டாக்டர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் காசநோயாளிகள் குறித்து உள்ளூர் காசநோய் சிறப்பு சுகாதார மையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.  காசநோய் ஒருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது தெரிந்து இருந்தும் அது குறித்து தகவல் தெரிவிக்காமல் இருக்கும் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் கூட சிறை தண்டனை விதிக்கப்படும்.காசநோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்றுநோயாகும். மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் நோயை விளைவிக்கக் கூடியதாகும். இந்த நோய் உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களை மற்றவர்களுடன் பரவாத வகையில், அவர்களை மேலாண்மை செய்வது மிகவும் அவசியமாகும். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் டாக்டர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். காசநோய் குறித்து ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து காசநோயாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருப்பது, பொது சுகாதார மைய அலுவலர்களின் கடமையாகும்.’’இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை